#கற்கை_நன்றே_138
என்னுடைய பரிசோதனைகள் மூலம் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், ஒருவன் கனவு காண வேண்டும், அந்தக் கனவை நனவாக்க முயற்சி செய்ய வேண்டும். அந்தக் கனவு ஒருநாள் அவனையும் அறியாமல் நனவாக வந்து அடையும்'
-தோரோ எழுதிய 'வால்டன்'. புத்தகத்தில்
சமீபத்தில் குறைவாக படிப்போரின் கணக்கு தேர்வுத்தாளில் சில மாணவர்களின் மதிப்பெண் குறைந்தது பற்றி பார்த்த போது.. தொடர்ந்து ஒரு மாணவன் ஒரே தவறு செய்து வந்தான்.அந்த தவறு நிவர்த்தி செய்யவேண்டியப் பட ஒன்றுதான்.ஆனால் அது பயிற்சி மூலம் தான் மாற்றப்படவேண்டிய ஒன்று.பயிற்சி என்றாலோ தொடர்ந்து ஒரு செயல் செய்ய வேண்டுமென்றாலோ இன்று பலருக்கு விரக்தி மனமே வருகிறது. பொறுமை இல்லை.உடனே நடக்க வேண்டுமென அவசர புத்தி வற்புறுத்துகிறது. ஆனால் மாற்றம் மெதுவாகவே நிகழும்
இதுகுறித்து சின்னஞ்சிறு பழக்கங்களில் ஜேம்ஸ் கிளியர் எடுத்துக்காட்டுடன் கூறியுள்ளார்..
குளிரான ஓர் அறையில் உங்களுக்கு முன்னால் ஒருமேசையின்மீது ஒரு சிறிய பனிக்கட்டி வைக்கப்பட்டிருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். தற்போது அந்த அறையில் இருபத்தைந்து டிகிரி வெப்பநிலை நிலவுகிறது. பிறகு அந்த அறை மிகவும் மெதுவாகச் சூடேற்றப்படுகிறது. இறுதியில் 32 டிகிரியில் பனிக்கட்டி உருகத் தொடங்குகிறது. இந்த ஒரு டிகிரி மாற்றம் முந்தைய பல ஒரு டிகிரி மாற்றங்களிலிருந்து எந்த விதத்திலும் வேறுபட்டிருக்கவில்லை. ஆனால் அது ஒரு மிகப் பெரிய மாற்றத்தைக் கட்டவிழ்த்துவிட்டது.
ஒரு கணத்தில் நிகழுகின்ற ஒரு பெரிய மாற்றம், முந்தைய பல கணங்களில் நிகழ்ந்த சிறுசிறு மாற்றங்களின் கூட்டு விளைவுதான்.
மூங்கில்கள் நிலத்திற்கு அடியில் தம்முடைய பிரம்மாண்டமான வேர்ப்பின்னல்களை வளர்த்தெடுப்பதில் முதல் ஐந்து ஆண்டுகளைச் செலவிடுகின்றன. பிறகு ஆறு வாரங்களில் அவை தொண்ணூறு அடிகள் உயரத்திற்கு விண்ணளாவ வளருகின்றன.
பழக்கங்களும் இதே போன்றவைதான். எந்தவொரு தேடலின் ஆரம்பகட்டத்திலும் இடைப்பட்ட நிலைகளிலும் பல ஏமாற்றங்கள் உங்களுக்காகக் காத்திருக்கும். நீங்கள் ஒரு நேர்க்கோட்டில் வேகமாக முன்னேறப் போவதாக எதிர்பார்த்திருப்பீர்கள். ஆனால் எந்த முன்னேற்றத்தையும் உங்களால் பார்க்க முடியாது. அது உங்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். நீங்கள் முன்னோக்கிச் செல்லுவதற்கு பதிலாக ஒரே இடத்தில் சிக்கிக் கிடப்பது போன்ற உணர்வை நீங்கள் அனுபவிப்பீர்கள். சக்தி வாய்ந்த விளைவுகள் மிகத் தாமதமாகவே உருவாகும்.
“நான் ஒரு மாதமாக தினமும் ஓடிக் கொண்டிந்தும்..உடலில் ஏன் எந்த மாற்றம் நிகழவில்லை?" என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இதை நான் 'தேக்கச் சிந்தனை'என்கிறார்கள். இந்த வகையான சிந்தனை உங்களை ஆட்கொள்ளத் தொடங்கினால், நல்ல பழக்கங்களை நீங்கள் சுலபமாக விட்டுத்தள்ளத் தொடங்கிவிடுவீர்கள். ஆனால், ஓர் அர்த்தமுள்ள வித்தியாசம் ஏற்பட வேண்டுமென்றால், இந்த வகையான சிந்தனையையும் தாண்டித் தாக்குப்பிடிக்கக்கூடிய அளவுக்குப் பழக்கங்கள் தொடர வேண்டும்.
தேக்கச் சிந்தனையிலிருந்து நீங்கள் விடுபடும்போது, ஒரே இரவில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக மக்கள் கூறுவர். வெளியுலகம் அந்த இறுதி விளைவை மட்டுமே பார்க்கிறது, ஆனால் அதற்கு முந்தைய அனைத்து நிகழ்வுகளையும் அது ஒதுக்கிவிடுகிறது. ஆனால், நெடுநாட்களுக்கு முன்பு நீங்கள் முதலீடு செய்த உழைப்புதான் அந்த மகத்தான இறுதி விளைவைச் சாத்தியமாக்கியது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
எல்லாப் பெரிய விஷயங்களுமே சிறிய துவக்கங்களிலிருந்துதான் வருகின்றன. தனியொரு சிறிய தீர்மானம்தான் ஒவ்வொரு பழக்கத்தின் விதையாக இருக்கிறது. ஆனால் அந்தத் தீர்மானம் மீண்டும் மீண்டும் செயல்படுத்தப்படும்போது, அதிலிருந்து ஒரு பழக்கம் உருவாகிறது, பிறகு அது வலுப் பெறுகிறது.
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment