#கற்கை_நன்றே_123
இந்தியாவில் மட்டும் தான் பெற்றோர் சாகும் வரை பிள்ளைகளை வளர்த்துக் கொண்டிருப்பார்கள். பிள்ளைகளது வாழ்வையும் சேர்த்து தானே வாழ்வார்கள்
-பிருந்தா சேது
என்னோட பிள்ளைக்கு நான் வேணுங்கிறது வாங்கித்தரேன், அவன் படிக்கிறதுக்கு ரூம் கட்டி வச்சிருக்கேன்.எல்லா வசதியும் செய்து வைத்திருக்கேன்..ஆனால் அவன் படிக்க மாட்டேங்கிறான்.
இன்னொரு புறம் அதிகாலையில் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் இரவில் தான் வருகின்றனர். இவர்களும் படிப்பதில்லை. நாங்கதான் படிக்கல இவனாவது படிப்பானு நினைச்சோம்
இவையிரண்டும் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் கேட்டது.
குழந்தைகள் மனநிலை, உளநிலை என பல்வேறு உதாரணங்களை அயல் நாட்டு பள்ளிகள், அங்குள்ள மாணவர்கள் மனது பற்றி பேசும் உளவியலாளர்கள் நம் பகுதி யதார்த்த நிலையை புரிய மறுக்கின்றனர். குழந்தைகளின் தவறுகளை பேசினாலோ சுட்டிக் காட்டினாலோ சமூகத்திற்கு வந்த வேற்று கிரக வாசிகளை போல் நோக்குகின்றனர்.அன்பினை மட்டும் கொடுத்தால் போதும் ஸ்விட்ச் போட்டது போல் எல்லாமே நடக்கும் என எண்ணுகின்றனர். ஆனால் முடிவு வேறுவிதம்.நம் மண்ணுக்கு ஏற்ற வாழ்வியல் தீர்வினை சரிவர முன்வைக்காமல் அனைவரையும் குற்றம் சொல்கின்றனர்.
யதார்த்த நிலை என்பது அலைபேசி, விளையாட்டு வீண் அரட்டை என அவர்கள் தனி உலகத்தில் வாழ்கின்றனர்.நல்ல நட்புக்கள் அமையாமல் அவர்களை போல் உள்ளவர்களே அவர்களுக்கு நட்பாய் அமைவது இன்னும் மோசம். இவர்கள் மீது அளப்பறிய பாசம் காட்டும் பெற்றோர்களோ மேலும் குழந்தை வளர்ப்பை சிக்கலாக்குகின்றனர். எப்போதோ படித்த கதை ஒன்று நினைவுக்கு வருகிறது
பருந்துகள் கூடு கட்டும்போது ஒரு நுட்பத்தைக் கையாளுகின்றன. முதலில் அவை கூர்மையான குத்தக்கூடிய பொருட்களைக் கொண்டு தங்கள் கூட்டைக் கட்டுகின்றன. பிறகு அவற்றின் மேல் கம்பளிபோன்ற பொருட்களை பரப்புகின்றன. அவை கொன்ற கோழி போன்றவற்றின் இறகுகளை அதன்மீது பரவ விடுகின்றன. பின்னர் ஆடு, மாடு போன்றவற்றின் ரோமத்தை கொண்டுவந்து மேலே வைத்து பஞ்சணை போன்ற சுகத்தை ஏற்படுத்துகின்றன. அந்த அழகான கூடு அழைப்பு விடுப்பதைப்போல சொகுசாக இருக்கும். அங்குதான் அவை முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கின்றன.
தொடக்கத்தில் அந்த குஞ்சுகள் இதமான அந்த சூழலில் வசதியாக வளர்கின்றன. பருந்து பின்னர், உடல் ரோமங்களை நீக்கிவிடும். இப்போது சொகுசு கொஞ்சம் குறைவு. சில நாட்கள் குஞ்சுகள் பழகியதும், பறவை சிறகுகளை தள்ளிவிடும். அதற்குப் பின்னர், கம்பளி போன்ற மெத்தென்ற பொருட்களையும் அகற்றிவிடும். இப்போது குத்தக்கூடிய பொருட்களோடு அந்த கூடு திகழும். குஞ்சுகள் போதிய அளவு வளர்ந்திருக்கும். அவை அந்த கூட்டில் சிரமப்படாமல் இருக்க பறந்து சென்றுவிடும். இப்படித்தான் கழுகு தன் குஞ்சுகளை முதிர்ச்சி அடையவைக்கிறது
இளமையில் கொடுமை வறுமையும் வளமையும் தான்.கனிவுடன் கூடிய கண்டிப்பே நல்ல ஒழுக்கமான குழந்தைகளை உருவாக்குகின்றன.
"காலையில் உன்னை எழுப்ப யாரும் இல்லை,
மாலை "ஏன் தாமதம்" என உன்னை கேட்கவும் யாரும் இல்லை.
"ஏன் இதை செய்தாய்?" என உன்னை கடியவும் யாருமற்ற சுதந்திரம் உன்னிடம் இருக்கையில்
உண்மையில் நீ யார்?
சுதந்திரமானவனா? தனிமரமா?"
– சார்ல்ஸ் புக்கோவ்ஸ்கி
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment