Wednesday, 23 July 2025

136

#கற்கை_நன்றே_136

தனிமை இரண்டு விதம்.

தனிமையாய் ஆகுவது..
தனிமையாய் ஆக்கப்படுவது.

இரண்டுமே..
வெவ்வேறு பாடங்களை 
கற்றுக் கொடுக்கிறது.

-பாலகுமாரன்

தனிமை என்பதன் பொருளே மற்றவர்களின் சிந்தனையோட்டம் நம்மைப் பாதிக்காமல் இருப்பதுதான். மற்றவர்களின் சிந்தனை நம்மைப் பாதித்தால் நாம் எதிர்வினை மட்டுமே ஆற்றுவோம். யார் சிந்தனையும் நம் மேல் படாத நேரங்களில் மட்டுமே சுயமாகச் சிந்திப்போம் என்கிறார் நியாண்டர் செலவன்..மேலும் தனிமையின் பொருள் குறித்து கூறுகிறார்..

ஊடகம், தொலைக்காட்சி, செல்ஃபோன், நேரடி உரையாடல். அனைத்தையும் தவிர்த்துவிட்டு ஒரு நாளைக்கு ஒரு மணிநேரமாவது தனிமையில் இருக்கவேண்டும். அதற்காகப் பூட்டிய அறைக்குள் உட்கார்ந்திருக்கக் கூடாது. எழுந்து நடக்கவேண்டும். இது நான் சொல்வதல்ல. தத்துவஞானிகள் பலரும் சொல்வது இதுவே.

 ‘உலகை மாற்றும் சிந்தனைகள் அனைத்துமே தனிமையில் நடந்து செல்கையில் தோன்றுபவையே’ என்கிறார் நீட்சே. சார்லஸ் டார்வினின் பரிணாமவியல் கோட்பாடு அவரது நீண்ட நடைப்பயணத்தில் உருவானதே. தன் மாலை நேரத் தனிமை நடையை எப்போதும், எதற்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டார் டார்வின். 

கவிஞர் வில்லியம் வர்ட்ஸ்வர்த்தின் கவிதைகள் அவரது நடையில் உருவானவையே.நீட்சே ஒரு நோட்டு, பென்சிலுடன் நடப்பார். நடக்கையில் தோன்றும் சிந்தனைகளை எழுதி வைத்துக் குறிப்பு எடுத்துக்கொள்வார். மீண்டும் நடப்பார். அவர் அளவுக்கு நடந்த தத்துவஞானிகள் யாருமிலர். அவர் நடந்துகொண்டே சிந்திப்பதைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார். 

‘எத்தனைக்கு எத்தனை குறைவாக உட்காரமுடிகிறதோ அத்தனை குறைவாக உட்காருங்கள். சுதந்திரமான வெளியிலும் சுத்தமான காற்றிலும் உருவாகாத எந்தச் சிந்தனைகளையும் நம்பாதீர்கள். அனைத்துத் தீமைகளும் கசடுகளும் உட்கார்ந்து சிந்திப்பதில் உருவாகின்றவையே.’ ஒரு நாளைக்கு எட்டுமணிநேரம் நடப்பார் நீட்சே. இப்படி நடந்து குறிப்புகள் எழுதியே உலகை மாற்றிய பெரும் நூல்களை எழுதி முடித்தார். 

ஓடுவது உடற்பயிற்சிக்கு. கூட்டமாகப் பேசியபடி நடப்பது சோசியலைஸிங் செய்ய. தனிமையில் நடப்பது மனதுக்கான பயிற்சி.  முழுநேரமும் தனிமையில் இருக்கமுடியாது. முழுநேரமும் மற்றவர்களுடன் இருக்கவும் முடியாது. தினம் கொஞ்ச நேரம் நாம் நம்முடன் மட்டுமே இருக்கவேண்டும். நம் வாழ்க்கையே அதனால் மாறும். ‘ஆய்வுகள் பலவும் இதனால் மூளையின் ஹிப்பாகாம்பஸ் பகுதி பெரிதாவதாகவும், மூளையின் பழைய செல்கள் உதிர்ந்து புதிய செல்கள் வளர்வதாகவும் கூறுகின்றன. ஏனெனில் நடக்கையில் மூளைக்குக் கூடுதலாக ரத்தம் பாய்கிறது. அப்போது தோன்றும் சிந்தனைகள் புதிதானவையாக இருக்கும்.

‘சமூக வலைத்தளங்களில் பிறரது மகிழ்ச்சி, இன்பம், துன்பம், ஆவேசம், அறச்சீற்றம் அனைத்தும் நம்மைப் பாதிக்கின்றன. நம்மை அறியாமல் அவற்றுக்கு நம் மனதில் இடம்கொடுக்கிறோம்.அவற்றிற்கு இடம் தராமல் தனிமை பழகுவோம்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment