கற்கை_நன்றே_140
மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை, நீங்கள் அவனுக்கு காட்டினால், அவன் மேம்படுவான்
-ஆண்டன் செகாவ்
நாம் எல்லாரும் மிகவும் நல்லவர்களே பொதுவெளியில்.. ஆனால் உள்ளுக்குள் ஒரு சிங்கமோ நரியோ உறங்கிக் கொண்டிருக்கும். மு.வ வின் நாவலில்.ஒரு பெண் திருமணம் செய்துகொள்ள தோழியை வற்புறுத்துவாள். அதற்கு அப்பெண்.. நாம் ஒருவரை பார்த்து பேசுவது ஓரிரு நிமிடமோ, ஒரு நாள் என்பது மட்டும்தான். அதில் நான் நல்லவள் போல் நடப்பேன்.. இனிமையாக பேசுவேன். ஆனால் அது என் வாழ்நாளெல்லாம் தொடர் முடியுமா? என்பாள்.அது போல் திருமணத்தில் நடிக்க முடியாது என்பாள். இது தான் உளவியல் உண்மை. ஆனால் முயற்சித்தால் இது முடியும் அல்லவா!
ஏன் தீமை என்ற ஒன்று இருக்கிறது? ஏன் மக்கள் சுயநலமாக இருக்கிறார்கள்? ஏன் அநீதி வெல்கிறது? இவை எல்லாம் தவறான கேள்விகள். தீமை, குற்றம், அநீதி. இதுதான் உலகின் இயற்கை நிலை. நன்மை, நீதி, தருமம், ஒழுக்கம், நேர்மை. இவை எல்லாம் கற்பிக்கப்பட்டவை. அதனால்தான் அரிதாகக் காணக்கூடியவையாக உள்ளன.
நாம் உண்மையில் கேட்கவேண்டிய கேள்வி ‘ஏன் நன்மையும் நீதியும் இன்னமும் இருக்கின்றன?’ என்பதே. நன்றாகப் பயிற்சி கொடுக்கப்பட்ட வீட்டு நாய் ஆபத்து என வந்தால் வளர்த்தவனைக்கூடக் கடிக்கும். உணர்ச்சிவசப்பட்ட சூழலில், கூட்டமாக இருக்கும் சூழலில், கோபமாக இருக்கும் சூழலில் கற்பிக்கப்பட்ட ஒழுக்கங்கள் காற்றில் பறந்து, நம் மிருக உணர்வுகளே ஆதிக்கம் செலுத்தும். அப்போது வருந்தத்தக்க செயல்களைச் செய்வோம்.
உணர்வு நம் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்னர் ‘ஏன் அப்படிச் செய்தோம்’ என வருந்துவோம். இயற்கைக்கும் செயற்கைக்கும் இடையே இடைவிடாது நடக்கும் போராட்டம் இது. கெட்ட செயல்களைச் செய்ய யாரும் யாருக்கும் கற்பிக்கவேண்டிய அவசியமே இல்லை.
பிறப்பில் இயற்கை தானாகக் கற்பித்துவிடும். ஆனால் நல்ல செயல்களை, நல்ல வழக்கங்களைக் கற்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். போதனை செய்துகொண்டே இருக்கவேண்டும். ஒரே ஒரு தலைமுறைக்கு அதைச் சரியாகச் சொல்லிக் கொடுக்கத் தவறினாலும்கூட சங்கிலித்தொடர் அறுந்துவிடும்.
உலகில் தீமை செழித்து வளர என்ன செய்ய வேண்டும்?
நல்லவர்கள் எல்லோரும் கைகளைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்தாலே போதும். பூனை வளர்க்காதது எலிகளை வளர்ப்பதற்குச் சமமாகும்.
எனும் பொன்மொழி.
ஆகவே நல்லவைகளை நமக்குள்ளேயே வளர்த்தெடுக்க முயல வேண்டும்.அது காலம் எடுக்கும் ஆனாலும் நல்ல பண்பு என்பதால் முயற்சித்துப் பெறுவோம்
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment