#கற்கை_நன்றே_134
இந்த உலகை அறிந்துகொள்ளுதல்,
பயன்படுத்துதல் என
அறிவியலின் இரண்டு விளைவுகள் உள்ளன.அறிவு பயன்பாடாக ஆகிறது,பயன்பாடு மேலும் அறிந்துகொள்ள தூண்டுதலை அளிக்கிறது. அறிவை அறிவியல் என்றும் பயன்பாட்டை தொழில்நுட்பம் என்றும் அழைக்கிறோம்.
இவ்வாறு தொடர்ச்சியாக அறிவும் பயன்பாடும் வளர்ந்ததே இன்றை நவீன உலகை உருவாக்கியது என்கிறார் ரஸல்
மனிதர்களின் சுபாவங்களைப் பற்றி
நியாண்டர் செல்வன் சொல்லும் போது..
இருவகையான மோசமான மனிதர்களை நாம் வாழ்நாளில் சந்திப்போம். ஒருவர் வெறும் பயமுறுத்துபவர். இவர்கள் விரும்புவது வெறும் ஆதிக்கத்தை மட்டுமே.அவர்களிடம் இருக்கும் ஒரே சக்தி பயமுறுத்தல் மட்டுமே. 70-80% பேர் வெத்து மிரட்டலுக்கே பயந்து போய், நமக்கு ஏன் வம்பு என ஒதுங்கிப் போய்விடுவார்கள்.
இரண்டாவது வகை ஸ்ட்ரீட் ஸ்மார்ட். இவர்களும் வெத்துவேட்டுகள்தான். ஆனால் நேரடியாக மிரட்ட மாட்டார்கள். இவர்களிடம் இருக்கும் ஒரே தன்மை சூழ்ச்சி மட்டுமே. கிட்டத்தட்ட 90-99% பேர் இவர்களிடம் ஏமாந்துவிடுவார்கள். ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர்கள். இவர்கள் நம் மேல் இருக்கும் கோபம், வஞ்சம் அனைத்தையும் வெளியே காட்டிக்கொள்ளவே மாட்டார்கள்.
சொல்லப்போனால் இவர்கள் ஆள் பார்த்து நன்றாக நடந்துகொள்வதால் இவர்களுக்கு எதிரிகள் எனவே யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் உலகம் முழுவதையும் இவர்கள் வேட்டை ஆடுவார்கள். சூழ்ச்சியை வெல்லும் சக்தி படைத்த ஒரே ஆயுதம் அறிவுதான்.
அறிவுக்கும் சூழ்ச்சிக்கும் என்ன வேறுபாடு? சூழ்ச்சி முட்டாளின் ஆயுதம். சூழ்ச்சிக்கு ஆழ்ந்த திட்டமிடல் கிடையாது. கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி ஏமாந்தவனை ஏய்ப்பதே சூழ்ச்சி.
ஒருவனிடம் அது செல்லுபடி ஆகாது என்றால் அடுத்த வினாடி இன்னொருவனை நாடி நகர்ந்துவிடுவார்கள். சூழ்ச்சிக்கு எல்லைகள், வரம்புகள், நீதி, நேர்மை ஏதுமில்லை. அறிவற்ற முட்டாள்களே பெரும்பாலும் சூழ்ச்சியில் ஈடுபடுவதால் அதன் பேட்டர்ன், சிக்னல்கள் அனைத்தையும் கண்டுபிடிப்பது மிக எளிது.
அறிவு ஒருவரை வீழ்த்தும் அளவு மிக வலுவான ஆயுதம். ஆனால் அறிவாளி தன் அறிவைப் பெரும்பாலும் அப்படி வீணாக்குவதில்லை. சூழ்ச்சியும், அறிவும் மோதுகையில் அறிவு சூழ்ச்சியை வெகு விரைவில் அடையாளம் கண்டுபிடித்துவிடும். சில வகை யுத்திகளை மட்டுமே கையாண்டு வெற்றி பெறும் சூழ்ச்சி, அறிவாளி முன் அது பயனாகாது போவதைக்கண்டு திகைக்கும். அதன்பின் அறிவை விட்டு விலகி எளிதான இரையைத் தேடி நகர்ந்துவிடும்.
அறிவு தன் கோபத்தை அத்தனை எளிதில் வெளிக்காட்டாது. உடனடியாகவும் காட்டாது. அறிவு வெற்று மிரட்டல்களை விடுக்காது. பார்த்தால் பயப்படும்படியாகவும் இருக்காது. ஆனால் ‘இதை நீ இனியும் தொடர்ந்தால் பதிலுக்கு நான் இதைச் செய்வேன்’ என அறிவு மிகத்தெளிவான எல்லைகளை வகுக்கும். அறிவு மிகத் தெளிவாக, மிகத் தீர்க்கமாக, வரம்புகளுக்குட்பட்டு ஆனால் திரும்ப அந்தப் பிரச்சினையே எழாதவாறு ஒரே அடியில் விஷயத்தைத் தீர்க்கும்.
சூழ்ச்சியை அறிவு, ராஜதந்திரம் என நினைத்து ஏமாறுவது மிகப்பெரும் தவறு. அதைவிட மிகப்பெரிய தவறு அறிவை பலகீனம் என நினைத்துத் தொடர்ந்து தவறுகள் இழைப்பது தான்
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment