#Reading_Marathon2025
#25RM055
Book No:87/100+
Pages:-128
கூத்தொன்று கூடிற்று
-லட்சுமி ஹர்
வாசிப்பின் மனநிலை சொற்களெங்கும் பரவிக்கிடக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. நேர்க் கோட்டுபாதையில் கதை சொல்வது வேறு. சொற்களின் வழியே மனதை ஈர்த்து சொற்களின் பாதையில் அர்த்தங்கள் எங்கும் சிதறிக் கிடக்கும் வண்ணம் ஒவ்வொன்றாய் நாமே எடுத்துச் சென்று கதையின் ஊடாக பயணிக்கும் அர்த்தங்களை தருகிறது. ஒரே மூச்சில் படிக்க முடியாது. கதைகள் இடையே தரும் ஆசுவாசம் அடுத்த கதையை படிக்க நேரம் எடுக்கிறது.ஒவ்வொரு கதையும் வார்த்தை சிக்கனத்தில் குறுநாவல் படித்த மென் உணர்வை தருகிறது.தலைப்புகள் அனைத்தும் ரசிக்கும் வண்ணம் இருந்தது.உதாரணத்திற்கு என்னுரை என்பது தான் தோன்றி தணல்.ஒரு கதையின் தலைப்பு 'நடக்கக் கற்றுக் கொண்ட மண்ணின் நிறுத்தற்குறிகள்.. அடடே சொல்ல வைத்தவை.
முதல்.கதையான மெழுகு இளைஞன் ஒருவன் மருத்துவமனை செல்லும் போது தேவாலையத்தின் வழியே கடந்து செல்கிறான்.அப்போது அங்கிருந்த கிழவியிடம் உரையாடல் நடக்கிறது.பின் திரும்பி வரும் மீண்டும் தேவாலயம் உள்ளே சென்று மனம் எழுப்பும் கேள்விகள் நம் அகத்தை தொட்டுப்பார்க்கிறது."எத்தனையெத்தனை வேண்டுதல்களின் உச்சரிப்புகள் அவ்விடத்தை நிரப்பிக் கொண்டிருந்தன" என சொல்லி கிழவியை செல்லமாய் விமர்சிகிறார்.
கூர்தீட்டிக்கொண்ட ஆயுதங்களாகச் செவியின் மடல்கள் மாறினாலொழிய உங்களால் அதன் உயிர்நிலையை அறிய முடியாது, திசையின் வேர்கள் எங்கும் ஊடுருவும் இசையை அனுபவிக்க ஒரே விதி..எனத் துவங்குகிறது கதவுச்சிறகு கதை.
சகமனிதர்களை வெறும் நம்பர்களாக எண்ணும் மனிதன் ஒருவன் லூதரின் பறவை பற்றிய ஆய்வுக்குழுவில் இணைகிறான்.அப்பயணமும் பறவைகளும் கற்றுக் கொடுக்கும் வாழ்கைப் பாடம் தான் இக்கதை. உங்களுக்குப் பரிசாக கிடைப்பது.உங்களுடனிருக்கும் ஒரு பறவையை ஒரு நாளும்.மறக்க வேண்டாம் என்பதே சாரம். தொழில் நுட்பத்தில் தோய்ந்த மனிதர்களை பறவைகள் மீட்கிறார்கள்.செய்திகளின் ஆச்சர்யத்தில்.நுழைந்து நுழைந்து பேரியற்கைக்குள் மனிதன் ஒளிந்து கொள்கிறான்.
கிராமத்து வீட்டில் மூலைமுடுக்கெல்லாம் சிதறி இருப்பது ' உங்களோட மேல் கூரை அழியும்" என்பதால் அக்கிராமத்தில் புதிதாய் மேற்கூரையுடன் வீடுகட்ட தயங்குகின்றனர்.கிராமத்து நம்பிக்கை உடைபட்டதா? உயிர்பெற்றதா என்பதே கூடாரக் கரிசன கதை.கோவா திரைப்பட விழாவில் வூடி ஆலனின் திரைப்படங்களை காணப் போகும் நாளிற்காய் காத்திருந்தான் திரைக்கலைஞன். செல்லும் வழியில் இளநீர் ரம் ஸ்பெசல் அருந்துகிறான்.அங்கே ஒரு பெண் அவனுக்கு அறிமுகமாகிறாள்.'சுவைகள் அனைத்தும் ஒன்றே,
அது மனிதர்களை சார்ந்து மட்டும் பொருந்துவது அல்ல என்றும் பிரித்தெறிய முயலாதே அதன் முடிச்சுகள் தரும் யாவற்றையும் அனுபவி என்றாள். அந்த சிந்தனை அவனை வாட்டியது. செயலின் மூலமே தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியும் என்பதை உணர்த்தினாள் என்பதை ஆன் தி ராக்ஸ் கதை. பயணங்களில் கிடைக்கும் அறிவு வாழ்க்கையின் மாற்றத்தில் எவ்வாறெல்லாம் உதவுகிறது அல்லது சிந்தனையை தெளிவுபடுத்துகிறது என்பதனை கதை உணர்த்துகிறது.
பல வருடங்களாக மருத்துவத் துறையில் வெற்றிகரமான மருத்துவராக வலம் வந்தவர் சுகி. ஒவ்வொரு நாளும் அவரால் குணமடைந்தவர்கள் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டே இருந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு முதுமை காரணமாக நினைவு மறதி ஏற்பட தொடங்கியது. அது சக மனிதர்களின் பார்வையை எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பதுதான் நடக்க கற்றுக் கொண்ட மண்ணின் நிறுத்தக்குறிகள் என்பது."இயலாமையை அவரது மூளை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது" என்ற வரி கதையின் ஓட்டத்திற்கு மிகவும் பொருத்தமாக இருந்தது.
சர்வேயர் வருகிறாரா என்று பார்த்து சொல் என்ற அப்பா மகளிடம் சொல்ல வெளிச்சசாயில் கதை தொடங்குகிறது தன் பூர்வீக வீட்டினை விற்பதற்கு அப்பா தயாராகும் நிலையில் மகளுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் அப்பாவின் நிலையை அறிந்து சம்மதிக்கிறாள். ஆனாலும் அவள் வைத்திருக்கும் குடை அவளுக்கு எல்லாமுமாக இருந்தது. அந்த குடை அவளுக்கு ஒரு உற்ற தோழியாக இருந்தது. ஒருமுறை வீடு விற்பதற்காக வந்த சர்வேயரிடம் அப்பா மழையில் செல்வதற்காக தான் ஆசையாய் வைத்திருந்த குடையை தந்து விடுகிறார். அதிலிருந்து சர்வேயரை அவள் தன் எதிரியாகவே நினைக்கிறாள். கதையில் "ரகசியத்தைப் பற்றிய ஒரு உரையாடலில் ரகசியத்தை தெரிந்து கொள்ள விருப்பம் இல்லையா? என்று கேட்பான். அதற்கு அவள் "காரணம் எப்போதும் அலுப்பை தரக்கூடியது என்கிறாள்."இடப்பெயர்வு என்பது வெளியில் சொல்ல முடியாத ஊமை வழி .நிகழ்ந்தவற்றை மாற்ற முடியுமா என்று யோசிப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறாள்.
இமைகளின் வருடல்களால் பார்வையின் நோக்கை மட்டும் உண்மை என ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய உணர்வுக்கு அனைவரும் தள்ளப்பட்டிருந்தார்கள் என்ற கவித்துவ உணர்வுடன் உள்ள நிப்பாணக் கதை.. இக்கதையின் நாயகி ஜமீன் வீட்டின் மகள். தனது காதல் காரணமாக ஜமீன் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறாள் ஒரு கட்டத்தில் கணவனை இழந்து தன்னுடைய கைக்குழந்தை கழுகு தூக்கி செல்வதை பார்த்து பித்து பிடித்து நிர்வாணமாக மீண்டும் தன் ஊரின் வீதியின் வழியாக நுழைந்து ஜமீன் வீட்டை அடைகிறாள். அதில் அவளை பூட்டி வைக்கிறார்கள்.
கதையின் பிற்பகுதியில் நாயகன் எவ்வாறு நாயகியை தேடி வரும்போது உயிர் துறக்கிறான் என்பதை நேரடியாக பார்ப்பது போல விவரித்து இருப்பார்.
சந்திரன் மாமா இறந்துவிட்டார் அவரை காணச் செல்லும் போது வழிநெடுக சுமந்து வந்த அமைதியை அம்மா மட்டும் விசும்பல் அழுகையால் கெடுத்து வந்தார். 3 தங்கைகளுக்கு அண்ணனான சந்திரன் மாமா எவ்வாறெல்லாம் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.. ஓட்டுனராக இருந்தபோது தான் சந்தித்த சவால்களை இறப்புகளை விபத்துகளை பற்றி எல்லாம் சிறுவயதில் தொடக்கச்சொல்லி கொடுத்ததை நினைவு கூர்ந்து கொண்டே கதையில் பயணிக்கிறான். அவருடைய ஒட்டுமொத்த வாழ்வையும் நினைத்துப் பார்க்கும் கதை தான் அந்த சொல்லில் மட்டும் பதிவின் வாசனை கதை.
மூவேந்தர்களின் படையெடுப்பால் குறுநில மன்னனான மாதி தீவிர தன்மையோடு போரிடும் முடிவெடுக்கிறான். இறுதியில் என்ன ஆனது என்பதுதான் யுதிரம் கதை. சினிமாவில் உதவிய இயக்குனராக இருக்கும் ஒருவன் ஒரு பயணத்தில் ஒரு சவப்பெட்டியை கவனிக்கிறான் அது கருப்பு வண்ணத்தில் இல்லாமல் வண்ண வண்ண நிறத்தில் இருப்பதால் அதனை தனது அடுக்குமாடி குடியிருப்ப எடுத்து வருகிறாள்
அங்கு இருக்கும் நண்பனுக்கும் இவனுக்கும் நடைபெறும் உரையாடலும் அந்த சவப்பெட்டி என்னவெல்லாம் செய்தது வண்ணங்களை தந்தது என திரில் கதை போல இந்த கதை அமைந்துள்ளது.
மரணம் தன்னை கதவாக மாற்றிக்கொண்டு தான் சந்திக்கும் மனிதர்களிடம் தனக்கான சாவியை அளித்துவிட்டு தன் வண்ணத்தினை மறைத்து வைத்துக் கொண்டு, தன்னை தைரியமாக அனுப்பும் மனிதனுக்காக காத்திருக்கிறது எனும் வரி கற்பனையின் அழகான அம்சமாக கருதப்படுகிறது.
கதைகள் இயல்பாக ஒரே வரியில் சொல்லாமல் மணல் விளையாட்டில் ஒளித்து வைக்கப்படும் கற்கள் போல கதைகள் தேடித் தேடிப் பிடித்து பின் தொடரும் அனுபவத்தை தருகிறது. கதையின் ஊடாக வரும் தத்துவ வரிகள் அந்த கதைகளை இன்னும் இறுக்கிப்பிடித்து மேலே செல்ல பயணிக்க உதவுகிறது .கதையின் மையம் ஓரிரு வரிகள் என்றாலும் அதனை சுற்றிய மொழி சரடு அதனை பிரித்துப் பார்த்தால் வரும் கதையின் மையம் என அழகிய மிட்டாய்களைப் போல ஒவ்வொரு கதையும் அமைந்துள்ளது. ஏற்கனவே நாம் ஒரு வரியை படித்தவுடன் ஊகிக்கும் மனதை மாற்றிக் கொண்டு சொற்களின் வழியாக கதைகள் காட்டும் பாதையில் சென்று பயணிக்கும் போது பெருங்காட்டியின் மௌனமும் பிரம்மாண்டமும் நமக்குத் தெரியவரும்.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment