Monday, 7 July 2025

85


#Reading_Marathon2025
#25RM055

Book No:85/100+
Pages:-193

சிறகுகள் முளைக்கும் வயதில்
-ஜி.ஆர் சுரேந்தர்நாத்

இளமை ததும்பும் எழுத்துக்களுக்கு சொந்தக்காரன் தான் ஜி ஆர் சுரேந்திரநாத். காதல் கதைகளாகட்டும் துப்பறியும் கதைகளாகட்டும் இவரின் நடை அழகு மிகவும் யதார்த்தம் சார்ந்ததாய் இருக்கும். சொல்ல வந்த விஷயத்தை நேர்த்தியான முறையில் சொல்வதோடு  எளிமையாக இருக்கும் வண்ணம் இவரின் எழுத்துக்கள். காலம் நமக்கு கம்ப்யூட்டரையும் டிவியும் செல்போனையும் கொடுத்துவிட்டு பதிலுக்கு ஏராளமானவற்றை நம்மிடம் இருந்து பறித்துக் கொண்டது. அப்போது சற்றே ஆயாசமாக புத்தகங்களை தான் நாம் நாட வேண்டியிருக்கும். இந்த நூலில் உள்ள நான்கு குறுநாவல்கள் வெவ்வேறு அனுபவங்களை தரும் வண்ணம் அமைந்துள்ளது.

சிறகுகள் முளைக்கும் வயதில் என்பது நான்கு நண்பர்களுக்கு இடையிலான கதை .கிராமங்களில் நாம் பார்த்த அல்லது நகரங்களில் நாம் பார்த்த நண்பர்கள்.. படிப்பு முடிந்தவுடன் வேலைக்குச் செல்லும் காலகட்டத்தில் வேலைக்குச் செல்லாமல் பல்வேறு கனவுகளுடன் நகரையோ கிராமத்தில சுற்றி வருவார்கள். அவர்களின் நகைச்சுவை ததும்பும் பேச்சும், வாழ்வு குறித்த எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் நகரும் காலம் பொற்காலம் என்று சொல்லலாம். அந்த வகையில் அசோக் ஜெய் பிரசாத் தினேஷ் ஆகிய நால்வரை சுற்றித்தான் இந்த குறுநாவல் அமைந்திருக்கும். 

இதில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்தும்போது நகைச்சுவை மிளிரும் வகையில் இருந்திருக்கும். அசோக்கிடம்  ஐடியாக்கள் நிறைய இருந்தாலும் பணம் இல்லாத தால் பட்டம் அறுந்த நூல் கண்டு போல கீழே இருக்கிறார் .ஜெய் என்பவர் காதல் இளவரசன். பல பெண்களிடம் பேசிக் கொண்டே இருப்பவர். தினேஷ் என்பவர் நன்கு படிக்கக் கூடியவன். இதில் பிரசாத் என்பவன் காதலித்த பெண் அவனை கைவிட்டு விட சோகமான மன நிலையில் உள்ளவன். இவர்கள் நால்வரும் சேர்ந்து ஊரில் டுடோரியல் வகுப்பு ஆரம்பிக்கிறார்கள். அதனோடு பிரச்சனகளும் ஆரம்பமாகின்றன. அந்த பிரச்சனைகள் தீர்ந்தனவா இவர்களின் நட்பு என்னவானது என்பதைத்தான் மிக சுவாரசியமாக இந்த நாவலின் சொல்லி இருப்பார்.

இரண்டாவதாக ஒரு தற்கொலை சில குறிப்புகள் துப்பறியும் நாவல்.துப்பறியும் நாவலில் கிளைமாக்ஸ் பகுதி தான் ஆரம்பத்தில் இருக்கும். அந்த ஆரம்பத்தை நோக்கி கிளைமாக்ஸ் சென்று கொண்டே இருக்கும் வகையில் இந்த நாவல் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஒரு அறையில் ஒருவன் பிணமாய் தூங்கிக் கொண்டிருக்கிறான். அதனை ஜன்னல் வழியே பார்த்த தங்கை அவன் ஏன்? தற்கொலை செய்து கொண்டான், என்று அறிய காவலர்களை நம்பாமல் ஒரு பத்திரிக்கையாளரை தேடி செல்கிறாள். அப்போது பல்வேறு குற்ற வழக்குகளை கண்டுபிடிக்கும் அந்த பத்திரிக்கையாளர் தான், இவன் தற்கொலைக்கான காரணத்தையும் கண்டுபிடிக்கிறார். கதை ஷேர் ஆட்டோவில் செல்வது போல ஒவ்வொரு நிறுத்தத்திலும் புதிய புதிய விஷயங்கள் வந்து கொண்டு இருக்கிறது. அதனை பின்தொடர்ந்து  சென்றால் இறுதியில் இவன் தற்கொலைக்கான காரணங்களை நியாயமான விதத்தில் விளக்கி இருப்பார்கள்.

தற்கொலை குறித்து சொல்லும் போது ஒரு வரலாற்று தகவலும் சொல்லி இருக்கிறார். அமெரிக்க எழுத்தாளர் ஹெமிங்வே  தற்கொலை செய்து கொண்டிருந்தார் .அடுத்த 35 வருடங்கள் கழித்து அவருடைய பேத்தியும் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல சிரியா நாட்டு கவிஞர் சில்வியா ப்ளாத் தற்கொலை செய்தார். அவர் பையனும் தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு குடும்பத்தில் ஏதேனும் தற்கொலைகள் நிகழ்ந்தால் மீண்டும் நிகழ வாய்ப்புள்ளதாக ஒரு கதாபாத்திரம் கூறுகிறது.

மூன்றாவதாக உள்ள தேடாதே என்னும் குறுநாவலும் துப்பறியும் வகை கதைதான். செய்தி தொலைக்காட்சியில் பணி செய்யும் கௌதம் சிரவந்தி இருவரும் காதலர்கள். விஜய் டிவி கோபிநாத் போல டாக் ஷோ நடத்துவது துப்பறியும் கேள்வி நேரம் நடத்தும் நிகழ்ச்சியில் ஹீரோ இருக்கிறார்.அப்போது ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனராக இருக்கும் நந்தகுமார் என்பவர் மூன்றாவது படத்தில் ஆஸ்கார் விருது வாங்கியவுடன் இனி நான் படம் இயக்கப் போவதில்லை என முடிவுக்கு வருகிறார். அப்போது அவரை பேட்டி காணச் செல்லும் ஹீரோ ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஆக மாற இவர் ஏன் படம் இயக்கவில்லை என்ற காரணத்தை துப்பறிகிறார். துப்பறியும் போது கிடைத்த தகவல்கள் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கின்றன கதையும் சுவாரசியமாக செல்கிறது.

நான்காவது நாவல் அழகிய பெண்ணே. கதையின் நாயகியான தேவி அக்கா நாயகனின் பக்கத்து வீட்டில் வசிக்கிறார் .ஒரு வயது தான் மூத்தவர் என்றாலும் அக்கா என்று தான் அழைக்கிறார். ஒரு அழகான பெண்ணை அக்கா என்று அழைக்க நேருவது எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டம் என்கிறான் நாயகன். ஆனால் ஒவ்வொரு முறையும் அக்கா என்று அழைக்கும் போது அவனுக்குள்ளே ஒரு குற்ற உணர்வு ஏற்படுகிறது. ஏனெனில் தேவி அக்கா உண்மையிலேயே அழகானவள். ஆனால் இளமைக்காலம் முதல் கொண்டு அவளோடு சினேகமாக பழகி வருகிறான் நாயகன். எத்தனையோ ஆண்கள் பெண் பார்த்து சென்றாலும் அனைவரையும் பிடிக்கவில்லை என நிராகரிக்கிறாள். அவளுக்கு ஏத்த ஆடவன் இன்னும் வரவில்லை என்று யோசிக்கிறாள் .அப்போதுதான் கணினி வகுப்புக்கு செல்லும் போது அங்கு இருக்கும் ஆசிரியரை அவள் காதலிக்கிறாள். இந்த காதலை நாயகனிடம் மட்டும் சொல்கிறாள் .ஒரு கட்டத்தில் அவனுக்கு சாலை விபத்து ஏற்பட முகவெட்டு பாதிக்கப்படுகிறது. காலில் சிறு ஊனம் ஏற்படுகிறது. இதனை ஏற்க முடியாத தேவி அக்கா அவனையும் நிராகரிக்கிறாள். இவ்வாறு அழகான ஒருவன் தான் தனக்கு கணவனாக வரவேண்டும் என்று சொல்லும்போது அவளுக்கு வயது கூடிக் கொண்டே போகிறது. இறுதியில் யாரை கை பிடித்தாள் என்பதுதான் இந்த கதையின் இறுதி முடிவு .

கற்பனைக்கும் வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசங்களை தேவி அக்காவின் வழியே நமக்கு கற்பிக்கிறார் ஆசிரியர். சாலைகளில் பலரையும் நாம் பார்க்கும் போது தேவி அக்காவின் சாயலை நாம் காண முடிகிறது .எத்தனை சுய சமாதானங்களுக்கு பிறகு தேவி அக்காக்கள் மணமுடிக்கின்றனர் என்பதனையும் இந்த நாவல் முடிந்தவுடன் எண்ணிப் பார்க்க தோன்றுகிறது.

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment