#Reading_Marathon2025
#25RM055
Book No:92/100+
Pages:-248
பருக்கை
-வீரபாண்டியன்
மலைவாழை அல்லவோ கல்வி என்ற வரிகள் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக உள்ள கல்வியை எப்பாடுபட்டேனும் பெற துடிக்கும் ஏழை மாணவர்கள் பெருநகரங்களுக்கு படையெடுத்துச் செல்வது கல்வியை வென்றெடுக்கத்தான். அந்த வகையில் ஊர் புற கிராமங்களில் இருந்து சென்னைக்கு முதுகலை பட்டப் படிப்புக்கு வரும் மாணவர்கள் விடுதியில் தங்கி பயில்கின்றனர். ஒருபுறம் கல்லூரி மாணவர்கள் கேளிக்கைகளில் ஈடுபட்டு, விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் வந்து கொண்டிருப்பதை பார்க்கிறோம் .
ஆனால் மறுபுறம் அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பகுதி நேர வேலையாக.. சமையல் உதவியாளராக, பரிமாறுபவர்களாக ,பல்வேறு பரிணாமங்களை எடுத்து தங்களுடைய பொருளாதார நெருக்கடிகளை தாங்கிக் கொண்டு கல்வியையும் பயின்று வெற்றி பெற்று வருகின்றனர். அந்த வகையில் சிலம்பு செல்வா சுரேஷ்,சக்தி ஆகியோர் பட்ட மேற்படிப்புக்காக விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். கிடைக்கும் சொற்ப நேரங்களில் படிப்புடன் சேர்ந்து கேட்டரிங் ஏஜென்டிடம் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நான்கு மாணவர்களின் வாழ்வியல் சித்திரம் தான் இந்த நாவல் நாவலின் மையப் பகுதியாக சாப்பாடு முக்கிய கதாபாத்திரமாக வந்து கொண்டே இருக்கிறது.
விடுதிகளில் சரியான உணவு வழங்காமல் இது போன்ற உணவு வகைகளை சுவைத்துப் பார்க்க மாணவர்களை தூண்டுகிறது ஒவ்வொரு பந்தி முடிந்தவுடனும் பசியுடனும் கடைசி பந்துக்காக காத்திருக்கும் அவர்களின் ஏக்கம் கண் முன் வருகிறது.
இந்த கதையின் மாந்தர்கள் திருமண நிகழ்வுகளில் பங்கேற்று உணவு பரிமாறும் மாணவர்களாக இருந்து வருகின்றனர். பணத்தின் தேவை அவர்களை இந்த சூழலுக்கு தள்ளி இருக்கிறது. சென்னையின் முதல் பாரம் தண்ணீர் கேனை சுமப்பதில் தான் துவங்கியது என்று சக்திவேல் எனும் மாணவர் எழுதியிருப்பார் .அதே நேரம் சுரேஷ் என்பவர் அந்த நள்ளிரவிலும் கூட புத்தகத்தை எடுத்து திருமணம் மண்டபத்தில் படித்துக் கொண்டு படிப்பு தன் பிடிமானம் என்று விளக்குகிறார்.
இன்னொரு மாணவர் எத்தகைய சூழலிலும் தம் கஷ்டங்களை பகடி செய்து கவிதை சொல்லுவார். இளம் மாணவர்களுக்கே உரிய எள்ளலுடன் கதை நகர்கிறது.ஒவ்வொரு முறை பந்தியில் பரிமாறும் போது ஆர்வம், கோபம், அமைதி அனைத்தும் அவர்களுக்கு வருவதை இயல்பாய் சொல்லியிருப்பார்.
ஆய்வுப் படிப்பு கேட்டரிங் வேலை என தொடர்ச்சியாக மாறி மாறி சென்று கொண்டிருக்கும்போது ஒரு முறை இனி வேலைக்குச் செல்லக்கூடாது என முடிவெடுக்கின்றனர். அப்போது பாடம் நடத்தும் ஆசிரியர் ஒரு இடத்தில் சாப்பாடு போடுவது ஒரு வேலை இல்லை தர்மம் என்கிறார். அது இவர்களின் தீர்மானத்தின் மீது தீக்குச்சி கிழித்து போட்டது போல இருக்கிறது. மனித ஆசைகள், முடிவுகள் எல்லாமே அப்படித்தானே நிலையில்லாத வாழ்க்கையில் சிலவற்றை நிலைப்படுத்த விரும்பும் போது ,நிலையாமை வந்து பாடம் புகட்டி விட்டு போகிறது என்று சரியான தருணத்தில் விளக்கி இருக்கிறார்.
இந்நாவலில் அவ்வப்போது வரும் ஒன்லைனர்கள் சுவாரஸ்யம் தருகின்றன..
*பூனைக்கு யார் மணி கட்டுவது? என்பது போல் யார் முதலில் தட்டை தூக்கிக்கொண்டு போவது என்று விழாவுக்கு வந்தவர்கள் ஆளாளுக்கு பார்த்துக் கொண்டிருந்தனர்.
*இத்தனை பிரச்சனைகள் வீட்டிலிருந்தாலும் வீடு தான் அவனது சந்தோசம். அங்கு தன் அவனது ஆத்மா உலாவி கொண்டிருக்கிறது
*ஒவ்வொருவரும் சாப்பிட்டு முடித்து எழும்போது, என் வயிறு என் கையைப் பிடித்து இழுத்தது
*சாப்பாட்டுக்கும் பணத்துக்கும் என்ன வித்தியாசம் தான்
சாப்பாட்ட serve பண்ண முடியும்
Save பண்ண முடியாது
பணத்தை save பண்ண முடியும்
Serve பண்ண முடியாது
*இது என்ன ஒரு பூ.. புத்தகத்தில் தேன் எடுத்துக் கொண்டிருக்கிறது
இத்தனை மலைகளைத் தாண்டி வந்தது இந்த தேனுக்காக தானா?
உரையாடல்கள் வழியாகவும் அவர்கள் வேலை பார்ப்பதில் வழியாகவும் நாவல் பயணிக்கிறது.
இயல்பான உரையாடல்களின் வழியே சாமானிய மக்களின் வாழ்வியலை நாவல் படம் பிடித்து காட்டுகிறது. பெரிய திருப்புமுனைகள் ஏதும் இந்த நாவலில் இல்லை கதை நேர்கோட்டிலேயே பயணிக்கிறது வரக்க வேறுபாடுகள் மாணவர்களை எவ்வாறு எல்லாம் அலைகழிக்கிறது என்பதை பேசுகிறது.
படிப்பு முடிந்து செல்லும் மாணவர்கள் பேருந்து நிலையம் வந்த போது புதிதாக வெவ்வேறு ஊர்களில் இருந்து பல மாணவர்கள் இறங்குவதை குறிப்பால் உணர்த்துகின்றனர். அவர்களும் நாளை கேட்டரிங் வேலைக்கு செல்வதோ அல்லது கிடைக்கும் சில பல வேலைகளில் செய்வதோ என அடுத்த தலைமுறையாக அவர்களை பார்ப்பதோடு பேருந்து புறப்படுகிறது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment