Thursday 15 December 2022

கைக்குட்டை வந்தது எப்படி ? -மகுடேசுவரன்


கைக்குட்டை வந்தது எப்படி ? 
OO

கை என்ற சொல்லுக்கு நாம் எல்லாரும் உடனே கருதுகின்ற பொருள் – நம் உடலின் உறுப்பு. தோள்பட்டையில் தொடங்கி முழங்கை, மணிக்கட்டு, உள்ளங்கை, விரல்கள் என முடியும் இன்றியமையாத உடல் உறுப்பினைத்தான் பொருளாகக் கொள்கிறோம்.

கை என்பதற்குப் பல பொருள்கள் வழங்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று சிறுமை. அளவில் தாழ்ந்த சிறுநிலை. பேச்சு வழக்கிலும் எழுத்திலும் கை என்ற சொல் அடிக்கடி பயன்படும். அங்கே சிறுமை, சிறிது, சிற்றளவு எனப் பொருள்கொண்டால் அச்சொற்களின் மிகச்சிறந்த பொருள் கிடைக்கும்.

“இங்கே எங்கே வந்தீங்க ?” என்று யாரையேனும் “சும்மா ஒரு கைவேலையாக வந்தேன்” என்பார்கள். கையால் செய்யக்கூடிய வேலையாக என்று பொருள்கொள்ளக்கூடாது. சிறிய வேலையாக வந்ததைத்தான் அவ்வாறு கூறுகிறார்.

சிறிய காரணங்களுக்காக, சிறு நலன்களைப் பெறுவதற்காக ஒருவர் செயல்பட்டால் அவரைக்  ‘கைக்கூலி’ என்போம். சிறுமையான கூலி பெற்றுச் செய்கிறவர்.

ஒருவரின் சிறுபணிகளுக்கான ஆள் என்றால் அவரைக் ‘கையாள்’ என்போம். உதவிச் சிறுபணிகள் செய்பவர் அவர்.

சிறுதடியைக் கைத்தடி என்பதும் அவ்வாறே. சிறிய புத்தகம் அல்லது சிறிய குறிப்பேடு ’கையேடு’ எனப்படும். சிறுமையாய்த் தரப்படுவது, ஊட்டுவது கையூட்டு. கைவிளக்கு என்றால் சிறுவிளக்கு. கைத்தொழில் என்றால் சிறுதொழில்.  

யானையைப் பார்த்தால் எப்படி இருக்கிறது ? சின்ன மலைபோல் இருக்கிறது. அதனால்தான் யானைக்குக்  ‘கைம்மலை’ என்று இன்னொரு பெயரும் உண்டு.

ஒருவரிடமிருந்து சிறுதொகையைப் பெற்றால் அது ‘கைம்மாற்று’ ஆகிறது. “அவசரத்துக்கு ஆயிரம் கைம்மாத்தா வாங்கினேன்” என்பார்கள். அந்தக் கையிலிருந்து இந்தக் கைக்கு மாற்றுவது இல்லை. சிறிய மாற்றாகப் பெற்ற தொகை. கைம்மாற்றுத் தொகை சிறிதாகத்தான் இருக்கும்.

கையில் வைத்திருக்கும் சிறுதுணியைக் கைக்குட்டை என்போம். கையில் வைத்திருப்பதாலா அப்பெயர் பெற்றது ? குட்டை என்பது குறுகிய அளவு. துண்டுத் துணிக்குப் பெயரானது. துண்டுத் துணியளவிலும் சிறியது என்பதால் கைக்குட்டை.

கை என்பதற்குச் சிறியது, சிறுமையானது என்று பொருள் கொண்டால் பல சொற்களுக்கு மிகச்சிறப்பான விளக்கம் கிடைக்கும்.

- கவிஞர் மகுடேசுவரன்

No comments:

Post a Comment