Saturday 10 December 2022

லதாமகன்


சற்று முன் இறந்தவனின் 
சட்டைப் பையில் செல்போன் 
ஒலித்துக் கொண்டேயிருக்கிறது கையில் எடுத்த 
காவலர் ”
சார் யாரோ 
அம்முன்னு கால் பண்றாங்க” 
என்கிறார் 
ஒரு நொடி இறந்தவனின் கண்கள் திறந்து 
மூடுகின்றன.

 - வே. பாபு 

உறவுகள் அலைபேசி எண்களாக மாறிவிட்ட காலத்தில் வாழ்கிறோம். அந்த எண்கள் கூட நினைவில் நிற்பதில்லை. ஒரு அவசர  நேரத்தில் அலைபேசி அணைந்துவிட்டால்,  உடனடியாக அழைத்துப்பேச சில எண்கள் கூட நினைவில் இல்லை.  முகங்கள் மொத்தமாக  நினைவிலிருந்து மறைந்து எண்களின் வழியாக உறவுகளை கண்டறியப்போகும் நாட்கள் தூரத்தில் இல்லை. நண்பர்கள் சந்திக்கும்போது, உறவுகள் சந்திக்கும்போது சில நிமிட பேச்சுக்குப்பின் பேசவும் எதுவும் இருப்பதில்லை. பல காலம் பேசமுடியாத உறவுகளைச் சந்திக்கும்போது கூட சில நிமிடங்களுக்குப்பின் அலைபேசிகளை ஒப்பிட்டுத்தான் எதாவது பேசவேண்டியிருக்கிறது.

 எல்லாரது அலைபேசியிலும், தொடர்பு அற்றுப்போன சில எண்கள் அழிக்க மனமில்லாமல் வைத்திருக்கிறோம். பிரிவிற்குப்பிறகு  நம்மை அழைத்துப்பேசவிரும்பாத நாம் அழைத்துப்பேசவிரும்பாத சில எண்கள்.  எந்த நாளிலாவது நாம் அழைத்துப்பேசவேண்டிய தேவை வரக்கூடும் என நாம் அஞ்சும் அல்லது விரும்பும் சில எண்கள். திடிரென ஒரு நாள் கனவிலிருந்து விழித்து, நம்மை அழைத்து இதுவரை நடந்ததெல்லாம் வெறும் கனவு என நம்மிடம் சொல் சொல்லப்போகும் சில எண்கள். ஒரு வேளை, நாமும் ஒரு மரண விபத்தைச் சந்திக்கக்கூடும்.

முற்றிலும் நினைவுதப்பி உடல் உயிரைப்பிரியப்போகும் கடைசி நிமிடத்தில், பல நாள் தயக்கத்தில் அழைக்காமல் விட்ட அந்த எண்ணின் நபருக்கு, நம் நிலை தெரிவிக்கப்பட்டு, அவர்கள் கூடுதனை உடைத்து வெளிவந்து நம்மை அழைக்கக்கூடும், மரணத்திற்கு முன் ஒரு முறை   நாம் அழைக்கப்பட்டுவிட வேண்டும் என விரும்பும் ஒரு அலைபேசி எண் எல்லார் அலைபேசியிலும் ஒன்றாவது இருக்கிறதுதானே?

-லதாமகன்

No comments:

Post a Comment