Thursday 29 December 2022

janakiraman


பறவையின் பாடங்கள்  

நாரைகள், பெருந்தாரா எனப்படும் ஒருவகை வாத்துகள் வருடத்தின் குறிப்பிட்ட ஒவ்வொரு பருவத்திலும் தொடர்ந்து 5,000 கிலோ மீட்டர்கள் வரை பறந்து வலசை போகின்றன. நாரைகள், இப்படிப் பறந்து செல்லும் போது, மணிக்கு சராசரியாக 65 கிலோமீட்டர்கள் வேகத்தில் பறக்கும், காற்று சாதகமாக அமைந்தால், மணிக்கு 110 கிலோமீட்டர்கள் கூட பறக்கும். 30,000 அடிக்கும் மேல், காற்றில் ஆக்ஸிஜன் அளவு குறைவாகவும், - 50 டிகிரி குளிரிலும் இருக்கும் இமயமலை மலைகளின் மேல் கூட அன்சர் இன்டிகஸ் எனும் நாரைகள் பறந்து செல்லும் சக்தியுடையவை. 

இப்படி வலைசை போதல், அவைகள் உயிர்வாழ மிக முக்கியமானது. பருவகாலத்துக்கு ஏற்ப, வேறிடத்துக்கு புலம் பெயர்ந்தால் தான் அவைகளால் முட்டையிட்டு, குஞ்சு பொறிக்கமுடியும். மனிதர்களின் வாழ்விலும், ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடாமல், சூழலுக்கு தகுந்தார்போல, நாம் எங்கு வளர முடியுமோ அங்கு செல்லுதல் தகவமைத்து உயிர்வாழ்வதற்கு அவசியமாகிறது. 

இப்பறவைகள் கூட்டம் கூட்டமாக பறந்து செல்லும் குணமுடையவை. அவற்றின் பறக்கும் பழக்கத்திலிருந்து நம் வாழ்க்கைக்குத் தேவையான மிக முக்கியமான படிப்பினைகளை அறிந்துகொள்ள முடியும்.

1. ஒவ்வொரு பறவையும் அதன் சிறகுகளை மடக்கி பறக்கும் போது, அது  பின்தொடரும் பறவைகளை உயர்த்துகிறது. எல்லாப் பறவைகளும் ஒரு "V" வடிவத்தில் பறப்பதன் மூலம், ஒரு பறவை தனியாக பறப்பதை விட 71% அதிக பறக்கும் சக்தியை பெறுகிறது. 

இதன் மூலம் ஒரு செயலில் நாம் மட்டும் தனியாக ஈடுபடுவதை விட, அணியாக சேர்ந்து செயல்படும் போது நமது நோக்கத்தை எளிதில் அடையமுடியும் என கற்கலாம்.

2. ஒரு பறவை அதன் கூட்டத்தில் இருந்து வெளியே சென்றுவிடும் போதெல்லாம், அது தனியாக பறப்பதில் இருக்கும் சிரமத்தையும் ஆபத்தையும் காற்றின் இழுவை மற்றும் எதிர்ப்பின் மூலம் உணர்கிறது, உடனடியாக மற்ற பறவைகளின் "தூக்கும் சக்தியை" பயன்படுத்திக் கொள்ள விரைவாக மீண்டும் தமது பறவைக் கூட்டத்தில் இணைந்துவிடுவதை காணமுடியும். 

எளிய வாத்துக்கு இருக்கும் அளவுக்காவது நமக்கு அறிவு இருக்குமானால், நாம் எங்கு செல்ல விரும்புகிறோமோ, அதே நோக்கத்தில் இருப்பவர்களுடன் இணைந்து இருப்போம் மற்றும் அவர்களின் உதவியை ஏற்றுக்கொள்வதற்கும் மற்றவர்களுக்கும் நம்முடையதை வழங்குவதற்கும் தயாராக இருப்போம்.

3. பறவைக் கூட்டத்தில் தலைவர் பறவை, தொண்டர் பறவை என்று எதுவும் இருப்பதில்லை. முதலில் பறக்கும் வாத்து சோர்வடையும் போது, அது பின்வாங்கி, பின்னால் சென்றுவிடும். முன்னிலையில் பறக்க, மற்றொரு பறவை தானாக வந்து, கூட்டத்தை வழிநடத்தும். இந்த சுழற்சியின் மூலம் எல்லா பறவைகளும் தமக்கான பொறுப்பை தமக்குள் பகிர்ந்துகொள்கின்றன. 

நாமும் கடினமான பணிகளில் அணியாக ஈடுபடும் போது, ஒருவரிடமே எல்லாப் பொறுப்புகளையும் சுமத்திவிடாமல், வழிநடத்தும் பொறுப்பை சுழற்சிமுறையில் எடுத்துக்கொள்ளும் போது அனைவரின் தலைமைத்துவ திறனும் உயரும். பணியும் சிறக்கும்

4. பறவைக் கூட்டத்தில் முன்னால் காற்றைக் கிழித்து செல்லும் பறவைகளை, உற்சாகப்படுத்த.  அதன்  வேகத்தை ஊக்குவிக்க, பின்னால் இருக்கும் பறவைகள் தொடர்ந்து ஓசை  எழுப்புவதை பார்த்திருப்போம். 

அணியாக செயல்படும் போது, அணி உறுப்பினர்கள், அணிக்கு பங்களிப்பவர்களை தொடர்ந்து பாராட்டி, உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தவேண்டும். அதன் மூலம் அணியாக செயல்படுவது மகிழ்வாகவும், சிறப்பாகவும் அமையும். 

5. பறவைக் கூட்டத்தில் எதாவது ஒரு பறவை நோய்வாய்ப்பட்டாலோ அல்லது காயப்பட்டாலோ அந்த பறவையுடன் வேறு இரண்டு பறவைகள் கூட்டத்தை விட்டு வெளியேறி, நோயுற்ற பறவைக்கு உதவி செய்து பாதுகாக்கின்றன. அது மீண்டும் பறக்கும் வரை அல்லது இறக்கும் வரை அவை அதனுடன் இருக்கும். பின்னர் அந்த இரண்டு பறவைகள்  வேறு பறவைக் கூட்டத்துடன் சேரும் அல்லது, தனது பழைய கூட்டத்தை வேகமாக பறந்து இணையும். 

பறவைகளைப் போன்ற  உணர்வு நமக்கும் இருந்தால், நம்மில் சிலர் கடினமான நேரத்தால் அவதியுறும் போது,  நாம் அவர்களுக்கு துணையாய் நிற்போம். நமது பணி தற்காலிகமாக தடைப்பட்டாலும் உதவி தேவைப்படுபவருக்காக நமது ஆதரவை அளிப்பது மொத்த அணியையே வலுப்படுத்தும்.

பறவையைக் கண்டு விமானத்தை படைத்தது பெரிய சாதனை இல்லை. பறவையின் இயல்பிலிருந்து கற்று, மனிதத்தை மேம்படுத்துவது தான் பெருஞ்சாதனை.

-janakiraman

No comments:

Post a Comment