Saturday 17 December 2022

சுதந்திரத்தின் விலை- janakiraman



ஆய்வாளர்கள் ஒரு சோதனையை செய்து பார்த்தார்கள். ஒரு கண்ணாடிக் குடுவை நிறைய தானிங்கள் நிரப்பி அதன் மேல் ஒரு எலி வைத்தார்கள். அந்த எலிக்கு மிகவும் மகிழ்ச்சி. எங்கேயும் அலையாமல், இருந்த இடத்திலேயே தானியம் கிடைத்த தால் உற்சாகமாக அவற்றை உண்ண ஆரம்பித்தது. சில நாட்களாக எங்கேயும் செல்லாமல் அந்தக் குடுவையில் இருந்த தானியங்களை உண்டு மகிழ்ச்சியாக இருந்தது. 

கொஞ்சம் கொஞ்சமாக தானியங்கள் குறைந்து ஒரு கட்டத்தில் அந்த குடுவையில் அடிப்பாகத்துக்கு வந்த பிறகு தான் எலிக்கு தான் குடுவைக்குள் சிக்கிக்கொண்டோம், அதிலிருந்து வெளியேற முடியாது என்பது புரிந்தது. இப்போது, அந்த எலி, தனது உணவுக்கு வெளியில் இருந்து யாராவது அளித்தால் தான் உண்டு உயிர் வாழ முடியும். அதே போல, அப்படியே தானியம் கிடைத்தாலும், தனக்கு விருப்பமான தானியம் தான் கிடைக்கும் என்பதும் உறுதியில்லை. ஆரம்பத்திலிருந்த மகிழ்ச்சி எலிக்கு இப்போது பறிபோனது.

இந்த சோதனையிலிருந்து நமக்குக் கிடைக்கும் படிப்பினைகள்:

1.தற்காலிக மகிழ்ச்சி சில சமயங்களில் நீண்டகால சிக்கலையோ ஒரு சிறையையோ நமக்கு ஏற்படுத்திவிடக்கூடும்.

2. நமக்கு பொருட்கள் எளிதாகவும், உழைக்காமலும் கிடைத்தால் நாம் சீக்கிரத்தில் மற்றவரை சார்ந்திருக்க ஆரம்பித்துவிடுவோம்.

3. எலி, ஓடியாடி, தானியத்தை கண்டுபிடித்து சாப்பிடக்கூடிய மிருகம். அது தானியம் தன் காலடியில் கிடைத்த தும் வேறிடங்களில் தானியத்தை தேடுவதை நிறுத்திவிட்டது. அதே போல, நமக்கு இருக்கும் திறமைகளை பயன்படுத்தத் தவறினால், நாம் நமது திறமையை விட அதிக மதிப்பு மிக்க சுதந்திரம் மற்றும் தேர்வுசெய்யும் உரிமை ஆகியவற்றை இழக்க நேரிடும்

4. சுதந்திரம் என்பது நமக்கு எளிதாக கிடைக்காத ஒன்று என்றாலும் அதனை மிக எளிதாக நாம் இழக்கக்கூடும்.

வாழ்வில் எதுவும் எளிதாக கிடைப்பதில்லை. அப்படி எளிதாக கிடைக்கும் எதுவும் நமது மதிப்பைக் கூட்டுவதில்லை. ஜப்பானிய பழமொழி ஒன்று, “இந்த உலகில் மிகவும் விலையுயர்ந்த பொருள் என்பது, எது நமக்கு இலவசமாக கிடைக்கிறதோ அது” எனக் கூறுகிறது.  


-janakiraman

No comments:

Post a Comment