Monday 26 December 2022

janakiraman


வலியிலிருந்து வலிமைக்கு… 

இங்கிலாந்து ஒரு தீவு. அதனைச் சுற்றியிருக்கும் மொத்த கடற்பரப்பின் நீளம் சுமார் 2885 கி.மீ. 2018ம் வருடம், ரோஸ் எட்க்லே (Ross Edgley) என்பவர் இங்கிலாந்தை சுற்றியிருக்கும் மொத்த கடற்பரப்பையும் நீந்திக் கடப்பது என்று முடிவெடுத்தார். அது சாதாரண விஷயம் இல்லை. இது வரை அதனை யாரும் செய்ததுமில்லை. அவர் இந்த மிகக் கடினமான முடிவை எடுத்த போது, உலகின் பல விளையாட்டுத்துறை நிபுணர்கள், ரோஸ் எட்க்ளேவின் உடல்வாகு நீச்சலுக்கு உகந்தது இல்லை. அவரது தலை பெரிதாக இருக்கு, உடலில் கொழுப்பு சத்தின் விகிதம் அதிகமாக உள்ளது. அவரால் இந்த சவாலை ஜெயிக்கமுடியாது என்று கூறினார்கள். 

ஆனால், ரோஸ், தனது மனம் சொல்வதைக் கேட்டார்.  இந்த மொத்த தூரத்தையும் 157 நாட்கள், தினமும் சுமார் 8 முதல் 10 மணி நேரம் நீந்தி, 37 முறை ஜெல்லி மீன்களின் கடிகளால் பாதிக்கப்பட்டு, 25 லட்சம் நீச்சல் ஸ்ட்ரோக்குகளுடன் கடலுக்குள்ளேயே ஒரு படகில் அவ்வப்போது ஓய்வெடுத்து, நீந்திக் கடந்திருக்கிறார். இந்த நீச்சல் பயணம், வலி நிறைந்த ஒன்று தான். உடலும், மனமும் எந்தத் தருணத்திலும் சோர்வடைந்து விடும். ஆனால், வலியை ஏற்றுக்கொள்ளும் போது தான் வலிமை பிறக்கிறது. 

கென்யாவில் "களஞ்ஜின்" என்ற ஒரு ஆதிவாசியினம் வசிக்கிறது. உலகின் அதி சிறந்த ஓட்டப்பந்தய வீரர்கள் இந்த ஆதிவாசியினத்தில் இருந்து தான் வந்திருக்கின்றனர். இது வரை வரலாற்றில் மொத்தம் 17 அமெரிக்கர்கள் மட்டுமே மராத்தான் ஓட்டத்தை இரண்டு மணி நேரம் பத்து நிமிடத்துக்குள் ஓடிக்கடந்திருக்கிறார்கள். ஆனால், 2011ம் வருடம் அக்டோபர் மாதம் மட்டுமே 32 களஞ்ஜின் இன வீரர்கள், மாரத்தான் ஓட்டத்தை இரண்டு மணி நேரம் பத்து நிமிடத்துக்குள் ஓடியிருக்கிறார்கள்.

ஒரு களஞ்ஜின் வீரர் ஒலிம்பிக் மாரத்தான் ஓட்டத்துக்கு இரண்டு நாள் முன்பு, சிறுநீரகத் தொற்று ஏற்பட்டு அவதிபட்டார். அவர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளக்கூடாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஆனால் அவர், பிடிவாதமாக மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டு, கடுமையான வலியுடன் ஓடி, முதல் பரிசையும் வென்றார். வாழ்க்கை முழுவதும் வலியை ஏற்றுக்கொண்டு அதன்மூலம் மூலமாக வலியை வெல்வதை கலாச்சாரமாகவே களஞ்ஜின் இனத்தினர் பின்பற்றி வருகின்றனர். 

ஜப்பானின் "தெந்தாய்" புத்த பிரிவில் ஒருவர் குருவாக வேண்டுமென்றால், அவர் "கெய்ஹோஜியோ" எனும் சடங்கை மேற்கொள்ளவேண்டும். கடப்பதற்கு கடினமான, "ஹயி மலை"யை 7 ஆண்டுகளில், 1000 நாட்கள் குறிப்பிட்ட முறையில் சுற்றி வந்தால் அவர் அந்த சடங்கை நிறைவு செய்தவராக கருதப்படுவார். 

அந்த மலைப்பாதை மிகக் கடுமையானது.  கடந்த 150 ஆண்டுகளில் வெறும் 46 பேர் மட்டுமே வெற்றிகரமாக இந்த மலைப்பாதை பயணத்தை முடித்திருக்கின்றனர். சடங்கினை தொடங்கிய முதல் 100 நாட்களுக்குள் நாம் விருப்பப்பட்டால் இந்த சடங்கில் இருந்து பின்வாங்கி விடலாம். ஆனால் 100வது நாளுக்குப் பிறகு ஒன்று நாம் மிச்சம் 900 நாட்களையும் கடக்கவேண்டும் அல்லது, நமது உயிரை மாய்த்துக்கொள்ளவேண்டும் என்ற மரபு பின்பற்றப்படுகிறது. பயணத்தின் போது போதுமான உணவு கிடைக்காது. பேசி பழக நண்பர்களோ, குடும்பமோ இருக்காது. பாதை எளிதானதாகவும் இருப்பதில்லை. ஆனாலும் வலியைக் கடக்கும் போது தான் மெய்ஞான வலிமை ஏற்படும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

நம் வாழ்விலும், எந்த தருணங்களெல்லாம் வலி நிறைந்தவையாக, மனதை துவண்டுவிடச் செய்தவையாக இருந்தனவோ அவையே நம்மை பின்நாளில் வலிமையடைய செய்திருக்கும். "வலிமை" என்ற சொல்லுக்குள் "வலி" இருக்கிறது. ஆகவே, "வலி" இல்லாமல் "வலிமை" இல்லை. 

-janakiraman

No comments:

Post a Comment