Tuesday 20 December 2022

ஜானகிராமன் நாபலூர்


Habitfulness & Mindfulness 

நாம் ஒரு கப் தேநீர் அருந்துகிறோம், ஆனால் ஒரு கோப்பை தேநீரின் ஒவ்வொரு துளியையும் நாம் முழு நினைவுடன் அருந்துவதில்லை. குடித்துக்கொண்டிருக்கும் போது, மனது வேறெதையோ சிந்தித்துக் கொண்டிருக்கும். இதைப் போல பல லேலைகளில், நமது மனது அந்த வேலையில் லயிப்பதில்லை. வேலை பாட்டுக்கு ஒரு பழக்கத்தில் நடக்கும். மனது, வேறெதையோ யோசித்துக் கொண்டிருக்கும்.

முதன்முறை வண்டி ஓட்டப் பழகும் போது நமது கவனம் முழுக்க சாலையிலும் வண்டியின் ஹேண்டில் பார்/ஸ்டீரிங் வீலிலும் இருக்கும். அதனை கவன ஆற்றல் என்போம். ஆனால் வண்டி ஓட்ட நன்கு பழகிவிட்டப் பிறகு நமது கைகள், வண்டியை ஓட்டினாலும் நமது மனம் வேறெங்கோ ஓடிக்கொண்டிருக்கும். 

இதே போல ஒரு புதிய திறமையை கற்றுக்கொள்ளும் போது இருக்கும் கவன ஆற்றல் (Mindfulness), அதனைக் கற்ற பிறகு, பழக்கம் ஏற்பட்டு விடுவதால் கவனிக்கும் தன்மை குறைய அல்லது மறைய ஆரம்பிக்கிறது. நமக்கிருந்த கவன ஆற்றலானது, பழக்க ஆற்றலாக (Habitfulness) மாறிவிடுகிறது.

நாம் திரும்பத்திரும்ப செய்யும் ஒரு செயல், பழக்கமாக மாறிவிடுகிறது. அந்த பழக்கம், ஒரு ப்ரோக்ராம் செய்யப்பட்ட  தானியங்கித் தன்மையுடன் செயலை செய்யவதால், அந்த செயலின் மீதான கவனத்தை மனம் இழந்து வேறெங்கோ மாற்றிக் கொள்கிறது.

ஒரு கோப்பை டீயை, குழந்தையொன்று முதன்முறையாக குடிக்கும் போது ஒவ்வொறு துளியையும் கவனிக்கும். அதன் சூடு, சுவை, மணம், அடர்த்தி ஆகியவற்றை உணரும். அது நாக்கில் பட்டு, மெதுவாய் கரைந்து வயிற்றுக்குள் செல்வதை உணரும். டீ உடலில் கரைந்ததும் உடலெங்கும் ஒருவித புத்துணர்ச்சி நமது செல்களில் மலர்வதை உணர்ந்து பூரிக்கும். இது போலத் தான் நாமும், டீயை  முதன்முதலில் குடிக்கும் போது ரசித்திருப்போம். பிறகு டீ குடித்தல் பழகி போனதும் அது ஒரு சடங்கு போல மாறிவிடுகிறது. இப்போதும் அதே கவனத்துடன், அதே குறுகுறுப்புடன் நம்மால் ஒவ்வொறு துளி டீயையும் குடிக்க முடியுமென்றால் நாம் பழக்க ஆற்றலை கவன ஆற்றலாக மாற்றிவிட்டோம் என பெருமை கொள்ளலாம். நமது ஒவ்வொரு செயலிலும், கவன ஆற்றலைக் கொண்டு வந்தால் அதுவே "விழிப்புணர்வு".

-படித்தது

No comments:

Post a Comment