Friday 23 December 2022

லதாமகன்


எல்லா மத்தியவர்க்க அப்பாக்களுக்கென்று ஒரு பொது முகம் இருந்தது. பிள்ளைகளிடம் கண்டிப்பாக இருக்கும் முகம். காலமாற்றத்தினால் சிறிது மாறினாலும், தன் கவலைகள் தெரியாமல் பிள்ளைகள் வளரவேண்டுமென்றும் தன் பிரச்சினைகள் தன் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் வந்துவிடக்கூடாதென்றும் ஏங்கும் ஒரு முகம் இன்னும் இருக்கிறது. பிள்ளைகளுடனான ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடும் முகம். அன்பை வெளிப்படுத்தத் தெரியாத ஒரு குழப்பமான முகம். வேண்டியதை வீட்டில் தருவித்துத் தருவேன் இன்னொருவரிடம் எது வேண்டியும் ஒரு நொடி கூட பிள்ளைகள் நின்றுவிடக்கூடாது என்றேங்கும் முகம். 

அப்பாக்கள் பிள்ளைகளை அறியும் அளவிற்கு பிள்ளைகள் அப்பாவை அறிவதில்லை. அவர் சுக துக்கங்கள். அவர் விருப்பு வெறுப்புகள். விருப்ப உணவு. விருப்ப இசை, விருப்பமான இடம் விருப்பமான சொல். அவரின் இளமைப்பருவம். அவரின் நோய்கள். அவரின் கனவுகள். தூங்கியபிறகு பிள்ளைகளின் அறையில் தயங்கித்தயங்கி நுழைந்து நெற்றியில் வைத்த முத்தம். வேர்கள் கிளைக்கு நீரைக்கடத்தினாலும், இலைகள் வேருக்கு எதையாவது கடத்துமா என்ன?

பெரும்பாலான பிள்ளைகள், தன் தந்தையை அவர்தம் இறப்பில்தான் அறிகிறார்கள். அவர் இல்லாமல் ஒரு இடத்தில் நின்று ஒரு உரையாடலை நிகழ்த்தும்போது, ஒரு தேவைக்கு அலையும்போது ஒரு அங்கீகாரத்தை எதிர்பார்க்கும்போது அப்பாவின் பிம்பம் ஒரு கனவைப்போல மேலெழுகிறது. தந்தையைப்பற்றிய புனைவுகள் அந்த இடத்திலிருந்து ஆரம்பிக்கின்றன. கொஞ்சம் நஞ்சம் அறிந்திருந்த தவறுகள் மனதில் ஆழத்தில் புதைக்கப்பட்டுகின்றன. தன் பிள்ளைகளை தன் பிம்பத்தில் பொருத்திப்பார்த்து அப்பாவுக்கு அன்பு செலுத்தத் தோன்றுகிறது. ஒரு நாள் அல்லது ஒரு நாள் விழுதுகள் வேரைத்தாங்கித்தானே மரம் வாழ வேண்டியிருக்கிறது?

-லதாமகன்

No comments:

Post a Comment