Tuesday 6 December 2022

janakiraman nabalur


மதுரையில் செயல்படும் பிரபல இந்திய - ஜப்பானிய கூட்டு நிறுவனம். அந்த நிறுவனத்தின் தலைவர் ஒரு முறை கூட்டத்தில், தர மேலாண்மை குறித்த அவரது அனுபவ நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார். 

அவரது நிறுவனத்தில் ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கான ஸ்பிரிங், வால்வு போன்றவற்றை தயாரித்து ஏற்றுமதி செய்வார்கள். ஜப்பானிய நிறுவனம் மிக உயரிய தரத்தில் பொருட்களை எதிர்பார்த்ததால் பொருட்களை கவனத்துடன் செய்து அனுப்பினார்கள். நிறைய இழப்பு ஏற்பட்டது. அதனால் அந்த ஜப்பானிய நிறுவனத்துக்கு, ஒரு ஸ்பிரிங்குக்கு ஐம்பது பைசாவை ஏற்றித்தருமாறு இவர்கள் கோரிக்கை வைத்தனர். அந்த ஜப்பானிய நிறுவனம், நேரில் மதுரை வந்து, தொழிற்சாலையை பார்வையிட்டு பிறகு முடிவெடுப்பதாக கூறினார்கள். 

ஜப்பானியர்கள் தொழிற்சாலையை பார்வையிட வந்தபோது, இவர் தமது தொழிற்சாலையில் தரமான தயாரிப்புக்காக என்னவெல்லாம் முறைகளை ஏற்படுத்தியிருக்கிறோம் என்பதை விளக்கினார். அவரது தொழிற்சாலையில் தனியாக ஒரு தர பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்கு பெரிய டிபார்ட்மெண்ட்டையே ஏற்படுத்தியிருந்தார். சுமார் இருபது தொழிலாளருக்கு ஒரு தரக்கட்டுப்பாட்டு அதிகாரியை நியமித்து, உற்பத்தியாகும் ஒவ்வொறு பொருளையும் கண்காணித்தனர். சிறு குறை இருந்தாலும் அதனை ஒதுக்கி கழிவாக தள்ளினர். இப்படி அனைத்து வழிமுறைகளையும் பார்த்த பிறகு ஜப்பானியர், இவரிடம் "நியாயமாக உங்களுக்கு இனிமேல் ஒரு பொருளுக்கான விலையில் இருபது பைசா குறைக்கத் தான் வேண்டும்" என்று சொன்னதும் இவருக்கு அதிர்ச்சி. 

"தரக்கட்டுப்பாட்டுக்கு தனித் துறையும் நிறைய கண்காணிப்பாளர்களையும் வைத்திருக்கிறீர்கள் என்றால், உங்கள் உற்பத்தியில் நிறைய குறைபாடுடைய பொருட்கள் உள்ளன என்று அர்த்தம். உற்பத்தி செய்யும் தொழிலாளியே தரத்துடன் உற்பத்தி செய்ய ஆரம்பித்தால் இத்தனை கண்காணிப்பாளர்கள் தேவையில்லை. மூலப்பொருள் மற்றும் உற்பத்தி செலவும் உங்களுக்கு கணிசமாக குறையும். வேஸ்டேஜ் ஆனப் பொருட்களை நிர்வகிப்பதும் அதனை அப்புறப்படுத்துவதும் உங்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது. ஆகையால், நீங்கள் ஏற்படுத்தும் தேவையற்ற இழப்புக்காக நாங்கள் ஏன் பொருளின் விலையை உயர்த்த வேண்டும்?" எனக் கேட்டனராம். அந்த உரையாடல் நமது நிறுவனத்தின் தலைவருக்கு புதிய சிந்தனையை தந்தது. 

பிறகு ஒவ்வொறு தொழிலாளிக்கும் தரமான உற்பத்தி குறித்து தொடர்ந்து பயிற்சி அளித்து, தொழிற்சாலைக்குள் சிறு சிறு தர-வட்டங்களை உருவாக்கி, அடுத்த சில மாதங்களில் உற்பத்தி செலவை கணிசமாக குறைத்தனர் என்று குறிப்பிட்டார். 

தரமான சேவை அல்லது தரமான உற்பத்தி என்பது வெளியிலிருந்து தரப்படும் மேற்பார்வையாலோ, கண்காணிப்பாலோ வருவதில்லை. அதில் ஈடுபடுபவர் உள்ளார்ந்த தெளிவைப் பெற்று, உற்பத்தியும் தரமும் வேறு வேறு அல்ல என்ற உணர்வை தமக்குள் பெறுவதால் மட்டுமே ஏற்படும். 

-படித்தது

No comments:

Post a Comment