Friday 16 December 2022

Ikigai – வாழ்வின் மதிப்பு.ஜானகிராமன் நாபலுர்


Ikigai – வாழ்வின் மதிப்பு.

கலஹரி பாலைவனப் பகுதியில் புஷ்மென் எனும் ஆதிவாசியினம் வசிக்கிறது. அவர்கள், மனிதர்களுக்கு இரண்டு வித பசி இருக்கிறது என்பார்கள். ஒன்று, சிறு பசி – அது வயிற்றுத் தேவைக்கானது. நேரத்துக்கு உணவு உட்கொள்வதன் மூலம் அந்த பசி தீர்ந்து போகிறது. மற்றொன்று பெரும்பசி. அது எல்லா பசிகளையும் விட மிகப்பெரிது. நமது "வாழ்வின் காரணத்தை அறிதல்" என்பதே அந்த பசி. ஒரு மனிதரின் வாழ்வை கொடுமையானதாகவும் கசப்பானதாகவும் மாற்றக்கூடிய ஒன்று, அவர், தான் ஏன் வாழ்கிறோம் என்று அறியாமல் இருப்பது என புஷ்மென் பழங்குடியினர் கருதுகின்றனர். 

இதே  தத்துவத்தை ஜப்பான் நாட்டில் ஒகினாவா தீவைச் சேர்ந்த மக்களும் முக்கியமாக கருதுகின்றனர். ஒகினாவா தீவில், சராசரியாக நான்கில் ஒருவர் 90 வயதுக்கு மேல் வாழ்கிறார். உலகில் மிக அதிக வாழ்நாள் ஆயுட்காலம் இருக்கும் மக்கள் அந்தத் தீவில் தான் உள்ளனர். அதற்கு அவர்களின் உணவு முறை, உடற்பயிற்சி போன்றவை காரணமாக இருந்தாலும், மற்றொரு முக்கியக் காரணம், “இகிகாய்” என்று அவர்கள் கூறுகின்றனர். 

ஜப்பானிய மொழியில் “இகி” என்றால் வாழ்க்கை, “காய்” என்றால் மதிப்பு என்று அர்த்தம். வாழ்வின் மதிப்பு. ஒவ்வொரு நாளும் காலையில் கண் விழிக்கும் போது, அன்றைய நாளினை வாழ்வதற்கு எது தூண்டுகிறதோ அதுவே ஒருவரின் இகிகாய். 

ஒகினாவாத் தீவில் வசிப்பவர்கள் தமக்கான இகிகாயை இயல்பாகவே கண்டுகொள்கின்றனர். அது ஒரு மோட்டாரை ரிபேர் செய்வதாக இருக்கலாம், டீ தயாரிப்பதாக இருக்கலாம், இசைக்கலைஞராகவோ, விவசாயம் செய்வதாகவோ, நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிவதாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தமது வாழ்க்கைக்கான மதிப்பை அறிந்தபிறகு, அந்த விஷயத்தில் தொடர்ந்து தம்மை ஈடுபடுத்திக்கொள்வதன் மூலம் பணி ஓய்வு என்பதே அவர்களுக்கு இருப்பதில்லை. தொடர்ந்து தாம் சார்ந்த பணியில் புதிதாக கற்றுக்கொண்டே இருக்கின்றனர். அந்த உந்து சக்தி அவர்களின் வாழ்நாளையும் நீடிக்கச் செய்து, ஆரோக்கியமாக இருக்க வைக்கிறது. 

நாமும் கூட, நமக்குப் பிடித்த வேலையை செய்யும் போது நமது உடலும் மனமும் புத்துணர்வுடன் இருந்திருப்பதை உணர்ந்திருப்போம். வேலையை ரசித்து செய்யும் போது சோர்வே தெரியாது.

நமக்கான இகிகாய் நான்கு வகைகளில் எதாவது ஒன்றாக இருக்கும். 1.எது உங்களுக்கு பிடித்திருக்கிறதோ; அது 2. எதில் நீங்கள் நிபுணத்துவம் பெற்றிருக்கிறீர்களோ; அது 3. எது இந்த சமூகத்துக்குத் தேவையாய் இருக்கிறதோ; அது 4. எதைச் செய்தால் உங்களால் பொருள் ஈட்டமுடியுமோ; அது. 

இவை நான்குமே ஒரே விஷயமாக அமைந்துவிட்டால் அவர் பேரருள் பெற்றவர் எனலாம். எப்படி இளையராஜா, இசையைக் கண்டறிந்தது போல. அது அவரது இகிகாயாக நான்கு அம்சங்களும் இயல்பிலேயே சேர்ந்து அமைந்துவிட்டது.
 
இனிய நற்காலை 🌸

#100_MM (100 Days of Morning Motivation: Day 71)

No comments:

Post a Comment