Tuesday 27 December 2022

janakiraman


அறமும் - வாலறிவும்

திருக்குறளின் முதல் அதிகாரத்தின் இரண்டாவது குறளான “கற்றதனால் ஆய பயனென் கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்” என்னை கவ்விக்கொண்டது. இந்தக் குறள், கற்றலின் பயன் பற்றிக் கூறுகிறது. ஆனால் இது கல்வி என்ற அதிகாரத்திலோ, அறிவுடைமை என்ற அதிகாரத்திலோ, அறிவு தொடர்பான கேள்வி, கல்லாமை போன்ற அதிகாரங்களிலோ இடம்பெறாமல், முதல் அதிகாரத்திலேயே இடம்பெற்றது ஏனென்ற கேள்வி ஏற்படுகிறது. அறத்துப்பாலில் கற்றல் ஏன் வருகிறது என்றும் யோசிக்க ஆரம்பித்தேன். இந்தக் குறளை படித்த பிறகு, அந்த நாள் முழுக்க இதே குறள் தான் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. 

இந்தக்குறளில் வரும் “வாலறிவன்” என்ற வார்த்தைக்கு மிக ஆழமான பொருள் இருப்பதாக பலர் சொல்லியிருக்கிறார்கள்.  திருக்குறளுக்கு விளக்கமளித்த அறிஞர்கள், வாலறிவு என்பதை, தூய அறிவு, உண்மையறிவு, இறையறிவு என்றெல்லாம் விளக்கமளித்திருக்கிறார்கள். ஆனால் அவற்றைத் தாண்டி வேறெதோ ஒன்று இந்த சொல்லில் இருக்கிறது.

பொதுவாக அறிவு மூன்று வகைகளில் அமையும். ஒன்று, அறிவியல் கண்டுபிடிப்புகளால் நாம் அறியும் "தொழில்நுட்ப அறிவு", இரண்டு, தலைமுறை தலைமுறையாக நமக்கு நமது முன்னோர்களின் மூலம் கடத்தப்பட்டு வரும் "வாழ்க்கையறிவு/இயற்கையறிவு" . மூன்றாவது நாம் சொந்தமாக படித்தும், அனுபவித்தும் அறிந்துகொள்ளும் "சுய அறிவு". 

அறிவு என்பது தொடர்ந்து தொகுக்கப்பட்டு, வளர்ந்து செல்லக்கூடிய இயல்புடையது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் நமக்குள், நாமிருக்கும் சுற்றுச்சூழலில் இருந்து புதிய புதிய செய்திகள், தகவல்கள் கொட்டிக்கொண்டே இருக்கின்றன. அவற்றை சரியாக ஒழுங்குபடுத்தும் போது அறிவாக மாறுகிறது. அதே சமயம், மனிதருக்கு அறிவு ஒரு சுமை. அறிவு விரிவடைய விரிவடைய நமது உணர்வுகள் மரத்துப்போகின்றன. அனைத்தையும் நமது அறிவு கொண்டு அளவிட, மதிப்பிட, ஒப்புமைப்படுத்த ஆரம்பித்துவிடுகிறோம். 

தகவல்களை சேகரிப்பது அறிவைத் தருவது போலவே, தகவல்களை நீக்கிக்கொண்டே செல்வது ஞானத்தை தருகிறது. ஞானம் என்பது நமக்குள் இருக்கும் அறிவை நீக்கிக்கொண்டே வருவதால் கிடைப்பது. “அறு + அம்”  என்பதே அறம் என்ற சொல்லாக மாறுகிறது. அறு என்றால், நீக்குதல், வெட்டுதல், பிரித்தல் என்று பொருள். மனிதவாழ்வில் நாம் முக்கியம் எனக்கருதுபவற்றை அறுத்து நீக்கிய பிறகு எஞ்சியிருப்பதே அறமாகிறது. அதுவே ஞானத்தை நோக்கிய குறைந்தபட்ச வாழ்க்கை நெறி.

அதே போல, வால் என்பதற்கு எஞ்சியிருப்பது என்ற ஒரு பொருள் உள்ளது. விலங்குகளின் வால், எஞ்சியிருக்கும் உறுப்பு. அனைத்தையும் நீக்கிய பிறகு எஞ்சியிருப்பதே வாலாகிறது. ஆதி சங்கரர், இறைவன் எவரென வரையறுக்கும் போது “நேதி நேதி” என்று கூறுகிறார். நேதி நேதி என்றால், “இதுவல்ல-இதுவல்ல” என்பதாகும். நாம் சட்டை அணிந்திருக்கிறோம், ஆனால் நாம் அந்த சட்டையல்ல என்றும் உணர்கிறோம் அல்லவா? அதைப் போலவே அடுத்தடுத்து நான் என்பது இதுவல்ல  இதுவல்ல என கழித்துக்கொண்டே வரவேண்டும். நமக்கு உடல் இருக்கிறது, ஆனால் நாம் உடல் அல்ல. நமக்கு மனம், புத்தி இருக்கின்றன, ஆனால் அவைகளும் நாம் அல்ல. மனத்தில் கிளம்பும் எண்ணங்கள் இருக்கின்றன. யோசித்துப் பார்த்தால் அந்த எண்ணங்களும் நாம் அல்ல. அடுத்து, நமக்குத் தோன்றும் எதையும் நாம் பார்க்கிறோம், கேட்கிறோம், உணர்கிறோம். அவைகளும் நாம் அல்ல என்று நீக்கி விட்டால், இறுதியில் எஞ்சி இருப்பது என ஒன்றிருக்கும்.  அதுவே இறைமை. வாலறிவு என்பதும் அதையே குறிக்கிறது. 

நமக்குள் குப்பையாக குவிந்திருக்கும் அனைத்து தகவல்களையும் தொடர்ந்து நீக்கிக்கொண்டே வந்து கடைசியில் எஞ்சியிருப்பதே வாலறிவு. அதுவே அனைவருக்கும் பொதுவான ஓர் பரம் பொருள். 

இந்தக்குறளில் கையாளப்படும் இன்னொரு சொல் “தொழுதல்”. தொழுதல் என்றால் வணங்குதல் என்ற அர்த்தம் இல்லை. "தொழு" என்பதற்கு "இணைந்த", "சேர்ந்திருக்கும்" என்று அர்த்தம். வீட்டோடு இணைந்த பகுதியை "தொழுவம்" எனக் கூறுவோம்.

இப்போது குறளின் விளக்கத்தை, நாம் இப்படி புரிந்துகொள்ளலாம். "கற்றதனால் ஆய பயனென் கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்” - நாம் கற்ற அனைத்தையும் விட்டொழித்துக்கொண்டே வந்து, இறுதி உண்மையாக எஞ்சி நிற்கும் பகுக்கமுடியாத, தூய அறிவோடு இணைந்திருக்க முடியவில்லை என்றால், கற்றதனால் ஆகச் சிறந்த பயன் தான் என்ன?

அறிவதை அழிப்பதே கற்றலின் நோக்கம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். அதுவே அறம்.  

இனிய நற்காலை 🌸

No comments:

Post a Comment