Friday 23 December 2022

Speed Vs Endurance – வேகமும் தொடர்திறனும்உலகில் அதி வேகமாக ஓடக்கூடிய மனிதர் உசேன் போல்ட். அவர் 100 மீட்டர் ஓட்டத்தை வெறும் 9.57 வினாடிகளில் கடந்து சாதனை புரிந்திருக்கிறார். அதே போல நிலத்தில் அதிவேகமாக ஓடக்கூடிய விலங்கு சிறுத்தைப்புலி. சராசரியாக மணிக்கு சுமார் 120 கி.மீ. வேகத்தில் ஓடக்கூடியது. இது போல வேகம், விரைவு சார்ந்த சாதனைகள் நம்மில் பலருக்கு நினைவில் இருக்கும். ஆனால் வேகம் மட்டுமே வியக்கவேண்டிய விஷயம் இல்லை. வேகத்தை விட, என்டூரன்ஸ் எனப்படும் "தொடர்ந்து, நிலையாக செயல்படும் திறனும் அற்புதமானது". நம்மில் பலபேர், “லியுப் கிப்சோக்” என்ற பெயரைக் கேள்விபட்டிருக்க மாட்டோம். கென்யாவைச் சேர்ந்த இந்த ஓட்டப்பந்தய வீரர், மாராத்தான் ஓட்டத்தில் உலக சாதனை புரிந்தவர். ஒலிம்பிக்கில் 42.2 கி.மீ. தூரத்தை 2 மணி நேரம், 1 நிமிடத்தில் கடந்து சாதித்து இருக்கிறார். 100 மீட்டர் ஓட்டத்தை வெறும் 9.5 வினாடியில் கடந்த உசேன் போல்ட், இதே மாரத்தான் ஓட்டத்தை அதே வேகத்தில் ஓடியிருந்தால் போல்ட், சுமார் ஒரு மணி நேரம் பத்து நிமிடத்தில் 42 கி.மீ. தூரத்தைக் கடந்திருக்க முடியும். ஆனால் போல்ட்டால் அதனை செய்யவே முடியாது. அதி வேகத்துக்கு பழக்கப்பட்டவரால் தொடர்ந்து ஒரு கி.மீ.க்கு கூட அதே வேகத்தில் ஓடமுடியாது.அதே போலத்தான் சிறுத்தைப் புலியின் வேகமும். சிறுத்தையால் மணிக்கு சுமார் 120 கி.மீ வேகத்தில் ஓட முடியும் என்றாலும் அதனால் அந்த வேகத்தை அதிகபட்சம் 500 மீட்டர்கள் வரை தான் ஓடமுடியும். பிறகு மூச்சிறைத்து, சோர்வுற்று வேகம் மிகவும் குறைந்துவிடும். "க்ரேஹவுண்ட்" எனும் நாய் இனம் இருக்கிறது. இந்த நாயினம் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் ஓடக் கூடியது. தொடர்ந்து 12,000 மீட்டர்கள் (12 கி.மீ) அதே 50 கி.மீ வேகத்துக்கு குறையாமல் க்ரேஹவுண்ட் ஓடும் திறன் படைத்தது. சிறுத்தைக்கும் க்ரேஹவுண்டுக்கும் 10 கி.மீ. ஓட்டப்பந்தயம் வைத்தால், சிறுத்தையை மிக எளிதாக க்ரேஹவுண்ட் ஜெயித்துவிடும். இது தான் “என்டூரன்ஸின் சக்தி".நமது செயல்களிலும், வாழ்விலும் வேகம் கவர்ச்சியாகத் தெரிந்தாலும், உண்மையில், நிலைத்த பயனை தருபவை என்டூரன்ஸ் எனப்படும் "தொடர்திறன்" தான். ஒரு நாள் முழுக்க நாம் கோபப்படாமல், அனைவருடன் பேரன்புடன் இருக்க முடியும். ஆனால் வருடக்கணக்கில் கோபப்படாமல் இருப்பதற்குத் தான் பெரிய பக்குவம் தேவைப்படுகிறது. அதே போலத்தான் உண்மையாய் இருத்தல், சகிப்புத்தன்மையுடன் இருத்தல், உணவுக்கட்டுப்பாட்டுடன் இருப்பது என அனைத்து நற்குணங்களைம் சில நாட்களுக்கு மட்டும் பின்பற்றுவதால் எந்த பயனுமில்லை. அவற்றை நாம் தொடர்திறனாய், நம் வாழ்க்கை முழுவதும் மாற்றிக்கொள்வது தான் பெருஞ்சாதனை. ஆமை – முயல் கதை போலத் தான் நமது வாழ்வும். கொஞ்சம் கொஞ்சமாக, மெதுவாக, நாம் கற்றுக்கொள்வதால் வாழ்க்கையில் எதையும் இழந்து விடமாட்டோம். என்டூரன்சுடன் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் நாம் சிகரத்தின் உச்சியை எட்டியிருப்போம். -janakiraman

No comments:

Post a Comment